பாரதியார் வரலாறு தமிழ் eBook

Sale!

0.00

பாரதியார் வரலாறு தமிழ் PDF Read Online

(1 customer review)

பாரதியார்  வாழ்க்கை வரலாறு PDF

பாரதியார் வரலாறு (Bharathiyar life History) தமிழில் PDF, ePub மற்றும் Mobi(Kindle) போன்ற மின் புத்தக வடிவில் இலவசமாக இந்த தளத்தில் கொடுத்துள்ளோம். பாரதியின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான தகவல்களை தொகுத்து அன்பர் ப.மீ  சுந்தரம் அவர்கள் எழுதிய நூல் இது. பாரதியார் வரலாறு தமிழ் pdf இல் உள்ள சில பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னுரை

அன்பரீர்!

சென்ற டிசம்பர்த் திங்கள், 14 ஆம் நாள், செகந்திராபாத்தில், தென்னிந்தியக் கழகத்தின் சார்பில் பாரதி திருவிழா, முதல் மந்திரியின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் யான் கலந்து கொள்ளச் சென்ற காலை பல பாரதி அன்பர்கள் என்னிடம் வந்து பாரதிப் பாடல்களைப் பற்றிய ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதி வெளியிடுமாறு வேண்டினர். அவ்வன்பர்கள் வேண்டுகோள் கிணங்கி , பாரதியார் வரலாறும் கவிதையும் என்ற இச்சிறு நூலை எழுதி வெளியிடலானேன்.

மகாகவி பாரதியாரைப் பற்றிப் பல அன்பர்கள் எழுதியுள்ள போதினும், அன்னாரின் பெருமைக் கேற்ற பல நூல்கள் பல அறிஞர்களால் பலவகையாக எழுதப்பட வேண்டும் என்பது அடியேனது துணிபு. இக்கருத்து பற்றியே எழுதப்பட்ட இச்சிறு நூலில் குற்றங்குறைகள் இருப்பின் அறிஞர் மனங்கொள்வாராக. இந்த நற்பணியில் என்னைப் புகுத்திய எல்லாம் வல்ல அருட் சக்தியைப் பணிந்து போற்றுகின்றேன்.

ஹைதராபாத் ,

23.1.153

அன்பன் , ப . மீ . சுந்தரம்

பாரதியார் குடும்ப புகைபடம், தனது நண்பர்கள், மனைவி மற்றும் குழந்தைகளுடன்

 

பாரதியார் வரலாறு தமிழ் PDF உள்ளே…

 • முன்னுரை….
 • பிறப்பும் இளமையும்..
 • திருமணம்..
 • தந்தையார் பிரிவு..
 • காசிமா நகர்..
 • அழியாப் பொருள்..
 • குரு தரிசனம்..
 • வங்காளப் பிரிவினையும் சுதேசி இயக்கமும்..
 • திலகருக்கு ஆபத்து..
 • புதுவை வாழ்க்கை….
 • வாரண்டு நீங்கியது..
 • கண்ணிற்கு மைதீட்டியது..
 • புதுவை நீக்கம்..
 • ஆணும் பெண்ணும்..
 • பாரதியும் சிங்கமும்..
 • திருவல்லிக்கேணி….
 • பாரதியின் இறுதி நாட்கள்..

 

 பாரதியார் பிறப்பும் இளமையும்

பாரத நாட்டின் புண்ணிய மேலீட்டாலும், செந்தமிழன்னைத் தவப்பயனாலும் தென் தமிழ் நாட்டின் தென்பகுதியில் திருநெல்வேலி ஜில்லாவில் சிவப்பேரி என்னும் கிராமத்தில் மகாகவி சுப்பிர மணிய பாரதியார் 1882 – ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் மூல நன்னாளில் அவதரித்தார் .

பாரதியின் தந்தையார் பெயர் சின்னசாமி அய்யர். தாயார் இலக்குமி அம்மையார். அறம் பொருள் இன்பமான அறநெறி வழாமல் இல்லறத்தை நடத்தி வரும் இவ்விருவர்களுக் கும் ஆண்மகப் பேறு கிடைத்ததின் பயனை நினைந்து எல்லாம் வல்ல இறைவன் அருளைப் போற்றிப் புகழ்ந்தனர்.

சின்னசாமி அய்யரோ நல்லியல்புகளும் ஒழுக்கங்களும் ஒருங்கே வாய்க்கப்பெற்றுத் திகழ்ந்ததுடன் தமிழ்ப் புலமையும் கணித அறிவும் கூரிய நுட்ப புத்தியும் கைவரப் பெற்றிருப்பதைக் கண்ட எட்டயபுரம் அரசர் இவர்மீது அன்பு கூர்ந்து தன் பணியாளர்களில் ஒருவராக அமர்த்திக் கொண்டார். ” அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும் ” என்ற முதுமொழிக் கிணங்க அய்யரவர்களும் தனது கடமைகளைச் செவ்வனே இயற்றி உற்றாரும் மற்றாரும் தன்னை நன்கு மதித்துப் பாராட்டும் வண்ணம் ஒழுகலாயினர்.

மண் களிக்கப்பெற்ற மாதவச் செம்மலாகிய நம் சுப்பிரமணியன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, நொடி பயின்றும் நடை பழகியும் பெற்றோர் உள்ளம் குளிரும்படி வளர்பிறையென வளருங் காலையில் , ஊழ்வினை வயத்தால் குழந்தை ஐந்தாண்டு நிறைவதற்குள் அருமைத் தாயார் இலக்குமி அம்மையார் இறைவன் திருவடி நீழல் எய்தினர்.

சின்னசாமி அய்யர் சிறிது காலந்தாழ்த்து மறுமணம் செய்துகொள்ள இசைந்ததின் காரணமாக இல்லற வாழ்க்கைப் புத்துயிர் பெற்று எழுந்தது. பாரதியாரும் அன்னாரின் தங்கையான பாகீரதியும் சிற்றன்னையான வள்ளியம்மையின் வயமாக வளர்ந்து தாயைத் துறந்த சேயென யாரும் கருதாவண்ணம் அன்பு கெழுமிய உள்ளத்தசாய் ஒழுகி வரலாயினர். பிள்ளைப் வத்தில் பாரதியார் தனது தந்தையிடம் மிகுந்த பயமும் மரியாதை யும் காட்டி வந்தமையால் தனது சிற்றன்னையாரிடமே தனக்கு வேண்டிய பொருள்களைக் கேட்டும், பெற்றும் , அளவளாவியும் வருவாராயினர் .

சின்னசாமி அய்யர் தனது புதல்வனைத் தகுந்த முறையில் கல்வி பயிலுவித்து அவையின் கண்ணே முந்தியிருப்பச் செய்தலே சிறந்தகடமையெனக் கருதிய மனத்தினராய், தாயைப் பிரிந்த பாரதி யாரின் உடல் வளர்ச்சியில் அதிக நோக்கங்கொள்ளாது உயிர் வளர்ச் சியில் அதிக ஊக்கங்காட்டத் தலைப்பட்டனர். பள்ளிப் பருவத்தின ராகிய பாரதியாருக்கு , தானே கணித வகைகளைக் கற்பிப்பதும், கல்வி அறிவு தீட்டுதலும், விளையாட்டயர்வுகளில் அதிகமாக ஈடுபடாதபடி கண்டித்தலுமாக இருந்தனர் என்ற குறிப்புக்கள் பாரதியார் பாடலினின்றும் இங்கு தெளிவாகின்றது.

” வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான் வீதியாட்டங்க ளேதி னும் கூடிடேன் , தூண்டு நூற்கணத்தோடு தனியனாய் தோழமை பிறிதின்றி வருந்தினேன் .

( சுயசரிதை )

அச்சமே கீழ்களது ஆசாரம் என்பதற்கேற்ப, சிறு பிராயத்தில் பள்ளிக்குப் போவதும் காலத்தை வீணாகக் கழிக்காமல் படிப்பதும் எழுதுவதுமாக இருந்த பாரதியார், எட்டு ஒன்பது வயதிலேயே பகலிலும் இரவிலும் மனதைக் கவரத்தக்க கனவுகள் காண்பதும் அதனால் களிப்படைவதுமாக இருந்தார். தமிழில் சிந்து வடிவாகத் தமிழ் இன்பத்தைச் சிந்திய அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தில் பாரதியாருக்கு அதிக மோகம் உண்டு. தமிழ் தேறும் செந்தமிழ்த் தாசனாகப் பின்னர் விளங்கப்போகும் நம் கவிஞர் பெருமானாகிய பாரதியார், சென்னிக்குள நகரண்ணல் கொடுத்த பதங்களைப் படித்து, மனனம் செய்து, தனக்கு வேண்டிய வகையில் இன்னிசையுடன் பாடிப்பாடி மகிழ்வாராயினர். கவிதாப் பிரவாகத் தில் முதன்முறை அவர் மூழ்கியது

மூழ்கியது இக்காலமே. குலவித்தைக் கல்லாமற் பாகம் படுமாகையால் நூலறிவோடு தன் குடும்ப வாசனை யும் பெற்ற பாரதி அண்ணல் இப்பிராயத்திலேயே, வேதாகமங்கள் கற்றுத் தெளிந்த தன் பக்கலுள்ள வயது முதிர்ந்த பெரியோர் களிடம், சாத்திரங்களைப் பற்றி வினாவுதலும், விடைபகர்தலுமாகத் தத்துவ நிலைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்க ஆரம்பித்தார். சில சமயங்களில் பள்ளிப் பலகையையும் ஏட்டுச் சுவடிகளையும் தெருத்திண்ணையில் விட்டுவிட்டு இயற்கையன்னையின் காட்சிச் சாலை கள் நிறைந்த சோலை இடங்களிலும் நீர்த் தடங்களிலும் சென்று தியான பரராய் நின்று ஆனந்தித்து உல்லாசமாக வீடு திரும்புவார். காதல் மோகங்கொண்டு திரிந்த செய்தி, அன்னார் நூல்களில் ஆங் காங்குக் காணப்படுவது இத்தன்மையான இயற்கை அன்னையிடம் ஏற்பட்ட காதலேயாம்.

வாணியின் காதல் அன்னாரை வளர்த்து வந்தது. பெரியார் பரம்பொருளை அடையக் காட்டிய வழிகள் பல திறத்தன. ஆன்ம தேய ஒருமைப்பாட்டிற் கலக்கும் மெய்யடியார்கள் சென்ற மார்க்கங்களினிடையே எளிதில் பற்றுதற்கேற்ற நாயகி நாயக பாவம் பாரதியார் உள்ளக்கிழியில் நன்கு வரையப் பெற்றிருந்தது .

கலைமகளைக் கட்டியணைத்து முத்தங் கொடுத்தலே உண்மைக் காதல் என்ற கொள்கையிலே அவர் ஈடுபட்டிருந்தமையினாலேதான் அவர் பெயர் பாரதி என்றாயிற்று.

சின்னசாமி அய்யரோ தன் மகன் தவப்புதல்வன், தண்ணளியன் என்று பிறர் கூறும் சொற்களைக் கேட்டு வந்தனரே யன்றி அவ் வுண்மையைத் தான் நேரில் அனுபவிக்க ஒண்ணாமலேயே இருந்து வந்தார். எட்டயபுரம் மன்னனிடம் பாரதியார் சில சமயங்களில் சென்று தான் இயற்றிய கவிகளைப் படித்துக் காண்பித்தும், இக் காலத்தில் நல்லிசைப் புலவர் இல்லை என்ற வசைமொழி தன்னால் நீங்கப்பெறும் என்றும் சொல்லி வருவதுண்டு.

அரசர் கல்வி கேள்விகளில் மிக்கவராகவும் கலைக் கண்ணாளசாகவும் இருந்து வந்தமையால் சுப்பையா என்ற பாரதியாரைப் பல வகைகளிலும் ஊக்கின தன்றி நன்மகனைப் பெற்ற சின்னசாமி அய்யரையும் புகழ்ந்து பாராட்டி வந்தார்.

சிறு பிராயத்தில் ஒரு சாலை மாணவர்களாக இருந்தவர்களில் சிலர் பாரதியாரின் திட உணர்ச்சியையும் உயர்ந்த குறிக்கோள்களையும் ஞானப் பெருக்கையும் கண்டு அவரிடம் அதிக அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வதுண்டு. நண்பர்கள் பக்கத்தில் இருக்கவும் பாரதியார் எதிர்பாராதபடி அருமையான இனிய பதங்களைப் பாடுவார். இன்பமேலீட்டால் ஆடுவார்.

எல்லோரும் மகிழ்ந்து களியாட்டயர்வர். இம்முறையில் அனுபவித்த அருமைத் தோழர்களுள் ஒருவர் பேராசிரியர் திரு. சோமசுந்தர பாரதியாராவர். பாரதியாரின் பெருமையையும் ஆற்றலையும் இளமையிலிருந்து அறிந்து அனுபவித்து வந்த அண்ணல் அவரேயாவர்.

திருநெல்வேலியிற் சென்று ஆங்கிலக் கல்வி பெறுமாறு தன் தந்தையார் அனுப்பிவைத்ததைக் குறித்து பாரதியார் மனத் தளர்ச்சி யுடன் ஏற்றுக்கொண்ட செய்தி அவர் வாக்கினின்றும் புலனாகிறது. ( Anglo – Vernacular School ) பள்ளிகளில் வெள்ளை அரசாங்கத் தினர், அக்கால அரசியலுக்குத் தக நியமித்திருந்த கல்வித் திட்டத் தைக் கவிஞர் பெருமான் பலபடக் கண்டித்தும் வெறுத்தும் கூறி உள்ளார்.

“ நெல்லை யூர்ச் சென்றவ் வூணர் கலைத்திறன் நேரு மாறென்னை எந்தை பணித்தனன். ”சேரன் தம்பி சிலம்பை யிசைத்ததும் தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும் பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பாரளித்துத் தர்மம் வளர்த்ததும் “

( சுயசரிதை )

என்றவைகள் அக்காலப் பிள்ளைகட்குப் பாடமாக இராததும், பேடிக் கல்வியைப் பயின்றுழல் பித்தராக அன்னார் அமைந்ததும் நம் கவிஞரின் உள்ளத்தைத் துன்புறுத்தியது என்பதாம் . தான் இவ் வுண்மையைத் தெளிந்தும் தந்தையார் ஆணையை மறுக்க அஞ்சி, சிறிது காலம் ஆங்கிலக் கல்விச் சாலையிலும் பயின்ற துண்டு. பொருளை வீணாகச் செலவழித்துத் தாய் நாட்டின் பெருமையையும், மேம்பாடு களையும் , தமிழ்க் கல்விச் சிறப்பையும் ஓர்ந்து கொள்ளாமல் காலத்தைப் போக்க நேரிட்டதே என்று மனம் புழுங்குகின்றார் சுப்பையன் .

அது வருமாறு:

‘ ‘ சூதிலாத வுளத்தின னெந்தை தான் சூழ்ந்தெனக்கு நலஞ்செய நாடியே . “

( சுயசரிதை )

“ செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது தீதெனக்குப் பல்லாயிரஞ் சேர்த்தன நலமோ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன் . “

( சுயசரிதை )

 

பாரதியார் திருமணம்

கவிதா மணியான பாரதி, பத்தாமாட்டைப் பிராயத்தசாய் உள்ள ஞான்றே கலைவாணியின்பாற் காதல் கொண்டு மோக வலையிற் சிக்கினர் என்பது முன்னரே சுட்டப்பட்டது . ஞானக்காதல் அவர் உள்ளத்தில் பெருக்கு எடுத்து ஓடினும் மெய்யுறு புணர்ச்சியின் காரணமாகிய உலக வாழ்வில் பாரதியாரைப் புகுத்துவான் வேண்டி , நல்லிலக்கணமமைந்த ஓர் நங்கையை , சின்னசாமி அய்யரும் சிற் றன்னையாரும் கூட்டு மணம் நிகழ்த்த நிச்சயித்தனர் . பாரதியாரின் பன்னிரண்டாவது ஆண்டுக்குள் திருமண ஏற்பாடுகள் சித்தமாயின.

பாரதியார் மற்றும் அவரது துணைவியார் அவர்கள்

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற தமிழ் மறை வாசகத்திற்கு யாதும் பழுது செய்ய எண்ண மிலாராய், ” தந்தை சொல் மிக்க மந்திர மில்லை” எனக் கொண்டு, செந்திருவன்னாளாகிய செல்லம்மாளென்னும் செல்வியை வாழ்க்கைத் துணையாகக் கொண்டார் . வசிட்டன் , இராமபிரான் ,

முதலியோர்க்கு வாய்த்த மாதர் போல் வாய்ப்பின் , மனையறம் மாண்புடைத்தாம்; அற்றேல் மணம் செய்யாது ஆண்மையைக் கைக்கொண்டு பிரம சரியமே நடத்தல் வேண்டும் என்ற கருத்துக்களைப் பாரதியார் பாடிப் போதல் படிப்போர்க்கு அவரது உள்ளத் தெளிவும் உயரிய நோக்க மும் தெள்ளிதிற் புலனாம் .

முன்னர் கூறியபடி திருமணம் நடந்தகாலத்தில் தனது வயதில் மிகக் குறைந்த செல்லம்மாளின் தொடர்பை ஓர் கேளியென்றே எண்ணினாராம். வினையின் வழியது உயிர்நிலை என்று தெளிந்த பாரதியார் ஏற்ற பண்புகளுடன் தான் ஒழுகுவ தோடு , காதலியின்பால் மிக்க அன்பு காட்டத் தலைப்பட்டார் .

மண மக்கள் அக்காலக் குல வழக்கப்படி ஒருவரோடொருவர் அளவளாவி மகிழ்தல் விலக்கப்பட்டிருந்ததாயினும், பாரதியார் தன் காதலலைகள் செல்லம்மாள் காதில் மோதும்படி சில சமயங்களில் அழகிய பாடல்களைப் பாடுவதுண்டு .

அன்னார் தன் கட்புலனாகுந் தருவாயில் இனிமையாகப் பாடி உற்சாகப் படுத்திவந்தனர். நாணம், பெண்களின் பிறப்பணி . பாரதியார் பாடும் காதற் பாட்டுக்கள் செல்லம்மாள் உள்ளத்தைப் பூரிக்கச் செய்யுமேனும், தான் ஒன்றும் பதில் கூறாது புன்முறுவல் பூப்பராம் . அகப்பொருட்டுறையின் பாற் படும் இலக்கண வகைகளில் தலைவியை நோக்கிக் கூறுதல் ஓர் மரபு. ஆறுமுக வேலன்

தனது காதலியான வள்ளியம்மையின்பாற் சென்று தனது தணியாக் காதலைத் தெரிவித்துக் கொள்ளும் காம பாவசமான நிலையை அண்ணாமலை ரெட்டியார் மனக் கண்ணால் பார்த்துப் பாடியுள்ளார்.

இச்சுவைப் பகுதி பாரதியாரின் கவிதா உள்ளத்தில் பாய்ந்திருந்தமையால் சமயம் நேர்ந்தபோது அப்பாடலைப் பாடினர் போலும் ! மணப்பந்தலில் கவிமணி பாரதியார் தனது மணவினையைக் குறித்து ஓர் ஆசுகவி பாடி , வந்திருந்தோரை இன்பக் கடலில் திளைக்க வைத்த செய்தி கவனிக்கத் தக்கதாகும்.

பாரதியார் வரலாறு தமிழ் PDF

தொடர்ந்து பாரதியார்  வாழ்க்கை வரலாறு PDF (bharathiyar life history in tamil pdf download) மின் புத்தகம் வடிவில் Online -இல் அல்லது பதிவிறக்கி படிக்கவும். 

1 review for பாரதியார் வரலாறு தமிழ் eBook

4.0 out of 5
0
1
0
0
0
Write a review
Show all Most Helpful Highest Rating Lowest Rating
 1. Dhanasekran r

  Its good

  + PROS: Study
  Helpful(1) Unhelpful(0)You have already voted this

  Add a review

  உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  பாரதியார் வரலாறு தமிழ் eBook
  பாரதியார் வரலாறு தமிழ் eBook

  0.00

  Tamill eBooks Org
  Logo
  Register New Account
  Reset Password
  %d bloggers like this:
  Shopping cart