கார்நாற்பது மூலமும் உரையும் eBook

கார்நாற்பது  eBook Free Download

கார்நாற்பது மூலமும் உரையும்

# இந்த புத்தகத்தை eBook (ePub, MOBI)  வடிவில் மாற்ற உதவி தேவை….

Description

கார்நாற்பது

பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது.

அகப் பொருள் சார்ந்தது. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று.

கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும், அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும், தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந் நூலில் எடுத்துக்கூறப்படுகின்றது.

கார்நாற்பது பாடல்கள்

அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையினாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார்நாற்பது என்னும் பெயர் பெற்றுள்ளது. எனவே, இது காலம்பற்றிய தொகை நூலாகும்.

காலம், இடம், பொருள், கருதி, நாற்பான்
சால உரைத்தல் நானாற்பதுவே

என இலக்கண விளக்கப் பாட்டியலார் காலம் பற்றியநாற்பது பாடலால் ஆகிய இந் நூலை முதற்கண் சுட்டியுள்ளார். இதனால் நானாற்பதில் இந்நூல் முந்தித்தோன்றியது என்று எண்ணவும் இடம் உண்டு.

கார்காலம் முல்லைத் திணைக்கு உரியபெரும் பொழுது. இந் நூல் இப் பெரும் பொழுதைக் கூறும் முகத்தால், அத்திணையின் உரிப்பொருளாகிய இருத்தல் என்பதை நிலைக்களமாகக் கொண்டுள்ளது. தலைவன் பொருள் முதலியன ஏதுவாகத் தலைவியிடம், ‘கார் காலத்தில்மீண்டு வருவேன்‘ என்று கூறிப் பிரிந்து சென்று, உரியகாலத்தில் அவன் வாராமை குறித்துத் தலைவி பிரிவு ஆற்றாது உரைத்தலும், தோழி அவளை ஆற்றுவித்தலும், சென்ற தலைமகன் கார் கண்டு தன் நெஞ்சிற்கும் பாகனுக்கும் கூறுவதும் ஆகிய செய்திகளே இந் நூலின்கண் அமைந்தபொருள். தோழி, தலைமகள், தலைமகன், பாங்கன் ஆகியோரை உறுப்பினராக அமைத்து, ஒரு நாடகம் போல அவர்களை இந் நூலில் பேச வைத்துள்ளார் ஆசிரியர்.

முல்லைநிலக் கருப்பொருள்களாகிய தோன்றி, பிடா, கருவிளம், முதலியவற்றையும் ஆங்காங்கே அழகுறவருணித்துள்ளார்.

மதுரைக் கண்ணங்கூத்தனார்

இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவரது இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர்மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்லை நிலத்தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார்; பலராமனைப்பற்றியும் நூலுள் கூறியுள்ளார் (19). எனவே, இவர் வைணவ சமயத்தவராதல் கூடும்.

இவர் நூலுள் வேள்வித் தீயையும்(7), கார்த்திகை நாளில் நாட்டவரால் ஏற்றப்படும் விளக்கையும் (26) கூறியுள்ளார். கார்த்திகை நாளில் விளக்கு வைத்து விழாக் கொண்டாடுதல் பண்டைவழக்கமாகும்.

குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,
அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்,
மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,
பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர, வருகதில் அம்ம!

என்பது அகநானூறு (141 : 7-11).’கார்த்திகைச் சாற்றில் கழி விளக்கு’ என்று களவழி நாற்பதும் (17), ‘குன்றில், கார்த்திகை விளக்கிட்டன்ன கடி கமழ் குவளைப் பைந்தார்’ என்று சீவக சிந்தாமணியிலும் (256) இவ் விளக்கீடு குறிக்கப்பெற்றுள்ளது.

சிந்தாமணியில் மேலும் ஓரிடத்து, இப் பகுதியில் குறித்தவாறே, ‘குன்றத்து உச்சிச் சுடர்’ (262) என்று கூறுதலால், குன்றத்தின்மேல் விளக்கு ஏற்றுதல் வழக்கமாயிருந்தது என்பதும் தெரியவருகிறது.

வளைக் கை மடநல்லார் மா மயிலை வண் மறுகில்
துளக்கு இல் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகைநாள்
தளத்து ஏந்து இள முலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ, பூம்பாவாய்? (2 : 47 : 3)

என வரும் தேவாரப் பாடல் இதனைச் சிவபெருமானுக்கு உரிய விழா என்று குறிக்கிறது. இவ் விளக்கீட்டுவிழா தேவார காலத்தில் திருக்கோயில் திருவிழாவாகவும் மாறிவிட்டமை போதரும்.

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது முதலிய திணை நூல்களில் வரும் செய்திகளை ஒத்தபகுதிகள் இந்நூலில் உள்ளன. இந் நூற் செய்யுட்களை மயிலைநாதர் முதலியோர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.

இந் நூலில் உள்ள நாற்பது பாடல்களில் 23 முதல் 38 வரையுள்ள பாடல்களுக்குப் பழைய உரை கிடைக்கவில்லை. துறை பற்றிய பழங்குறிப்பு உரையுள்ள பாடல்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது. ‘முல்லைக் கொடி மகிழ‘ என்று தொடங்கும் இந் நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுள்நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது.

Additional information

Authors Name

Reviews

There are no reviews yet.

Be the first to review “கார்நாற்பது மூலமும் உரையும் eBook”

Your email address will not be published. Required fields are marked *