களவழி நாற்பது மூலமும் உரையும்

(1 customer review)

களவழி நாற்பது eBook Download

களவழி நாற்பது மூலமும் உரையும்

# இந்த புத்தகத்தை eBook (ePub, MOBI)  வடிவில் மாற்ற உதவி தேவை….

Description

களவழி நாற்பது

பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது. சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந் நூல்.

இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர். இவர் சேர மன்னனுடைய நண்பன். நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதி ஆகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந் நூல் எனக் கருதப்படுகின்றது.

இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படைகளும் புரிந்த வீரப் போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன.

இந்நூலிலுள்ள மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் குறிப்பிடப்படுவது அக்காலத்தில் போர்களில் யானைப் படைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது எனலாம்.

களவழி

நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது ‘ஏரோர் களவழி’. பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது ‘தேரோர் களவழி’ தேரோர் களவழியைப் பாடும் நூல் களவழி நாற்பது. இந்தக் களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே தருகிறது. கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் செய்கிறது. சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டான் என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது.

போர்க்களம்

போர் ‘திருப்போர்ப்புறம்|திருப்பூர்’ என்னுமிடத்தில் நடைபெற்றதாகப் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது.
களவழி நாற்பதுக்கு உரை எழுதியோர் கழுமலம் என்னும் என்னும் ஊரில் நடைபெற்றதாகக் குறிப்பிடுகின்றனர்.
புறநானூற்றுக் கணைக்கால் இரும்பொறை சிறைச்சாலையில் உயிர் துறந்தான்.
களவழி நாற்பது நூலின் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்து மீட்கப்பட்டான்

களவழி நாற்பது

கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் நிகழ்ச்சியாகிய போர்ச் செய்தி பற்றியது களவழி நாற்பது ஒன்றே. ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப்பெறும் பாடல்கள் களவழி எனப்படும் என்று தொல்காப்பியர் வாகைத் திணையில் ஒரு துறை அமைத்துள்ளார்.

ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோற்றிய வென்றியும்

என்பது தொல்காப்பியம் (புறத்.21). களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல் தொகுதி. மேற்குறித்த தொல்காப்பியச் சூத்திர உரையில், நச்சினார்க்கினியர், ‘களவழி நாற்பது புலவர் களவழியைத் தோற்றுவித்தது’ என்று கூறி, ‘ஓஒ உவ மன்’ எனத் தொடங்கும் இந் நூற் செய்யுளையும் (36) மேற்கோள் காட்டியுள்ளார். இவர்க்கு முந்திய இளம்பூரணரும் களம் பாடியதற்கு இக் களவழிச் செய்யுளையே எடுத்துக்காட்டியுள்ளார். இந் நூலகத்துள்ள பாடல்கள் எல்லாம் ‘களத்து’ என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதலும் கவனிக்கத் தக்கது. ‘களத்து’ என்று முடிவதனாலும், போர்க்கள நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துள்ளமையினாலும், ‘களவழி’ என்றும், பாடல் தொகை அளவினால், களவழிநாற்பது’ என்றும், இந் நூல் வழங்கப் பெறுவதாயிற்று. பரணி நூல்களில் ‘களம் பாடியது’ என்னும் ஒரு பகுதி உண்டு. அதுவும் போர்க்களக் காட்சிகளைச் சித்திரிப்பதாகும்.

இடம் பற்றித் தொகுத்த நூலுக்குத் தண்டியலங்கார உரையில் (5) இக் களவழி நாற்பது மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. நானாற்பதில் இடம் பற்றிவந்ததற்கு இலக்கண விளக்கப் பாட்டியலில் (851) இந்நூல் எடுத்துக்காட்டாகத் தரப்பெற்றுள்ளது. எனவே, போர்க்களமாகிய இடத்தைச் சுட்டி எழுந்ததே இந்நூல் என்பது தெளிவு.

இந் நூல் தோன்றிய வரலாறு பற்றியசெய்திகள் தெளிவு இன்றிப் பற்பல ஐயப்பாடுகளை விளைவித்துள்ளன. இதனால், ஆராய்ச்சியாளர்களிடையே நேர்ந்துள்ள கருத்து வேற்றுமைகளும் பலவாம்.

களவழி நாற்பதின் இறுதியில் காணப்பெறும் குறிப்பை முதற்கண் நோக்குவோம்: ‘சோழன் செங்கணானும் சேரமான் கணைக்காலிரும் பொறையும் (திருப்)போர்ப் புறத்துப் பொருது உடைந்துழி, சேரமான் கணைக்காலிரும் பொறையைப் பற்றிக்கொண்டு, சோழன்சிறை வைத்துழி, பொய்கையார் களம் பாடி, வீடு கொண்ட களவழி நாற்பது’ என்னும் குறிப்பு உள்ளது. இதிலிருந்து, சோழன் செங்கணான் போர் என்னும் இடத்தில் கணைக்காலிரும் பொறையோடு போரிட்டான் என்பதும், போரில் சோழன் வெற்றி பெற்று, சேரமான் கணைக்காலிரும் பொறையைச் சிறைப்படுத்தினான் என்பதும், அப்பொழுது பொய்கையார் என்பார் சோழனது வெற்றியைப் புகழ்ந்து பாடிச் சேரனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார் என்பதும் தெரியவருகின்றன.

நூலுள் சோழனைக் குறித்து, புனல் நாடன், நீர் நாடன், காவிரி நாடன், காவிரி நீர் நாடன், செம்பியன், என்று இவ்வாறு பொதுப் படையாகச் சுட்டியுள்ளாரேயன்றி, அவனது பெயர் குறிக்கப்படவில்லை. செங்கண் மால் (4, 5, 11), செங்கண்சின மால் (15, 21, 29,30, 40 ) என்பன சோழன் செங்கணான் பெயரைச் சுட்டியனஆகா. பூவைநிலை வகையால் சோழனைச் ‘சேய்’ (13, 18, 34)என்று சுட்டியுள்ளது போல, இங்கும் திருமாலாகக் குறித்துள்ளார் என்றே கொள்ள வேண்டும். இங்ஙனமே சேரன் பெயரும் குறிக்கப் பெறவில்லை. பொதுவகையாக வேந்தர் என்னும் சொல்லையும், பகைவரைக் குறிக்கும் தெவ்வர், கூடார், செற்றார், நண்ணார், மேவார், ஒன்னார், அடங்கார் என்னும் சொற்களையுமே தந்துள்ளார். ஒரே ஒரு பாடலில் ‘வஞ்சிக்கோ’ (39)என்பது உள்ளது. ‘கொங்கரை அட்டகளத்து’ (14) என்பதனால் கொங்கர் சேரனுக்குத் துணையாக வந்து போரிட்டனர் என்பது பெறப்படும். சோழன் சேரனைச் சிறை செய்தான் என்ற இறுதிக் குறிப்பிற்கு மாறாக, ‘வஞ்சிக்கோ அட்டகளத்து’ (39) என்று சேரனைக் கொன்றதாகவே பாடலில் உள்ளது. ‘வஞ்சிக்கோவைக் கொன்ற களத்து ‘ என்ற பழைய உரையும் கவனிக்கத் தக்கது. அடுதல் என்பதற்கு வருத்துதல், அழித்தல், கொல்லுதல் முதலிய பல பொருள்கள் உள்ளமையினால், அட்ட என்பதற்கு வருத்திய என்று இறுதிக் குறிப்பிற்கு ஏற்பவும் பொருள் கொள்ளுதல் சாலும். போர் என்ற இடத்தைக் குறித்து நூலுள் ஒருகுறிப்பும் இல்லை. ‘காவிரி நாடன் கழுமலம் கொண்டநாள்’ (36) என்று வருதலின், இந்தப் போரில் சோழன் கழுமலம் என்ற ஊரைத் தனக்கு உரித்தாக்கிக் கொண்டான் என்பது போதரும்.

பொய்கையார் களவழி நாற்பதுபாடிச் சேரனைச் சிறையிலிருந்து விடுவித்தார் என்றே கலிங்கத்துப் பரணி, மூவருலா, தமிழ் விடு தூது முதலிய பின்னூல்கள் அறிவிக்கின்றன.

களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய உதியன்
கால்வழித் தளையை வெட்டி அரசிட்ட அவனும்

என்பது கலிங்கத்துப் பரணி (182).

மேதக்க பொய்கை கவி கொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும் (விக்கிரம.14)

அணங்கு, படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக் களவழிப் பாக் கொண்டோன் (குலோத்.19-20)

நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் கால் தளையை விட்டகோன் (இராச. 18)

என வருவன மூவருலாப் பகுதிகள். தமிழ் விடு தூது,

சேரமான் தன்னடிக்கு அண்டு தளை விடுத்தாய்; ஏழ் தளை உன்
பொன்னடிக்கு உண்டு என்பது என்ன புத்தியோ!

என்று சிலேடை நயம்படக் கூறுகிறது.

செய்கை அரிய களவழிப் பா முன்செய்த
பொய்கை ஒருவனால் போம் தரமோ-சைய
மலைச் சிறை தீர் வாட்கண்டன் வெள்ளணி நாள் வாழ்த்திக்
கொலைச் சிறை தீர் வேந்துக்குழாம்?

என வரும் ஒரு பழம்பாடலை நச்சினார்க்கினியர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்.

இங்ஙனம் பிறநூல்களும், தனிப்பாடலும், நூல் இறுதியிலுள்ள குறிப்பை ஒத்து அமைதலின், பொய்கையார் களவழி நாற்பது பாடிச் சேரமானைச் சிறையிலிருந்து விடுவித்தார் என்ற செய்தி உண்மையொடு பட்டதாகலாம்.

இச் செய்திக்கு மாறுபட்டதொரு குறிப்பு, ‘குழவி இறப்பினும் ஊன்-தடி பிறப்பினும்’எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாட்டின் (74) பழையகுறிப்பில் காணப்படுகிறது. அது,

‘சேரமான் கணைக்காலிரும் பொறைசோழன் செங்கணானோடு திருப்போர்ப்
புறத்துப் பொருது, பற்றுக்கோட்பட்டு, குடவாயிற்கோட்டத்துச் சிறையில்
கிடந்து, “தண்ணீர் தா” என்று, பெறாது, பெயர்த்துப்பெற்றுக் கைக்
கொண்டிருந்து, உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு’-என்பது.

இக் குறிப்பில் பொய்கையாரைப் பற்றிய செய்தியும், சிறைவீடு கொண்ட குறிப்பும் இல்லை. களவழிக் குறிப்பிற்கு மாறாக, சேரமான் கணைக்காலிரும்பொறை சிறைக் கோட்டத்தில் கிடந்து மானத்தால் இறந்து பட்டதாகக் காணப்படுகிறது. களவழிக் குறிப்புடன் இது மாறுபட்டது அன்று என்று காட்ட முற்பட்டோரில் சிலர், ‘துஞ்சிய’ என்பதற்கு வேறு வகையாகப் பொருள் கூறலாயினர். டாக்டர் உ.வே.சாமிநாதையர் 74-ஆம் புறப்பாட்டின் அடிக்குறிப்பில்,’துஞ்சிய என்பதற்கு மூர்ச்சித்த என்று பொருள் கொள்ளவேண்டும் போலும்!’ என்று குறித்துள்ளார். மேலும், தமது ‘சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்’ என்ற நூலில்(பக். 94), ‘துஞ்சிய என்ற சொல் இறந்த என்ற பொருளையே மிகுதியும் தருவதாயினும், இங்கு மூர்ச்சித்த என்றுபொருள் கொள்ள வேண்டும்’ என உறுதியாக எழுதியுள்ளார். இ.வை. அனந்தராமையர், ‘துஞ்சிய என்பதற்கு உறங்கிய என்று பொருள் கொள்ளலாம்’ என்பர். துஞ்சிய என்பது இறந்த என்னும் பொருளிலேயே மிகுதியாக வருதலின், இங்கும் இறந்த என்று பொருள் கோடலே நேரிதாம்.

புறநானூற்றுக் குறிப்பிலும் களவழி நாற்பதின் குறிப்பிலும் சேர சோழர்களது பெயரில் ஒற்றுமை இருப்பினும், முக்கியமான முடிவு நிகழ்ச்சி வேறுபட்டுள்ளது. புறநானூற்றில் இந்தப் பாட்டின் குறிப்பில் தவிர, வேறு இடங்களிலோ அல்லது சங்க நூல்கள் பிறவற்றிலோ சோழன் செங்கணானைப் பற்றியும் கணைக்காலிரும் பொறையைப் பற்றியும் ஒரு குறிப்பும் காணப் பெறாமையும் சிந்தித்தற் குரியது. புறநானூற்றில் இரண்டு பாடல்களைப் பாடிய (48, 49) பொய்கையார் என்பவர் சேரமான் கோக்கோதை மார்பனைப் பாடியுள்ளாரேயன்றி, கணைக்காலிரும் பொறையைப் பாடவில்லை. எனவே, புறநானூற்றில் காணும் செங்கணான், சேரமான் கணைக்காலிரும்பொறை, பொய்கையார் ஆகியோருக்கும், களவழி நாற்பதில் குறிக்கப் பெறுபவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எண்ணக்கூடவில்லை. இவர்கள் ஒரே பெயரைக் கொண்டு வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று கொள்ளுதலே இரு நூல் குறிப்புகளுக்கும் ஒத்ததாதல்கூடும்.

தமிழ் நாவலர் சரிதையில், ‘சேரன் கணைக்காலிரும்பொறை செங்கணானால் குணவாயிற்கோட்டத்துத் தளைப்பட்டபோது பொய்கைக்கு எழுதிவிடுத்த பாட்டு’ என்று குறிப்பிட்டு ‘குழவி இறப்பினும்’ என மேற்குறித்த புறப்பாடலைக் (74) கொடுத்து, அதன்பின்னர், ‘இது கேட்டுப் பொய்கையார் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தான்’ என்று அந் நூலைத் தொகுத்தவர் எழுதியுள்ளார். இதனால், இந் நூலாசிரியர் புறநானூற்றுக் குறிப்பையும், களவழி நாற்பதின் குறிப்பையும் ஒன்றாக இணைக்க முயன்றுள்ளார் என்பதும் புலனாம்.

இவரது குறிப்பு, மேற்குறித்த இரு நூல்களுக்கும் பின்னர் எழுந்தது என்றும், இரண்டையும் இணைப்பதற்கு இவர் செய்த ஊகம் என்றும் கொள்ளத் தக்கது.

அகநானூற்றுப் பாடல் ஒன்றில் (44),

நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறல் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர்ப்
பருந்துபடப் பண்ணி, பழையன் பட்டென,
கண்டது நோனானாகி, திண் தேர்க்
கணையன் அகப்படக் கழுமலம் தந்த
பிணையல்அம் கண்ணிப் பெரும்பூட் சென்னி

என, சோழன் ஒருவன் கணையன் என்பானை வென்று கழுமலம் கொண்ட செய்தி வந்துள்ளது. இதன் பழைய உரை, ‘நன்னன் முதலாயினார் சேரன் படைத்தலைவர் ; கணையன் சேரன் படை முதலி ; முன் சொன்னவர்க்குப் பிரதானி. கழுமலம் ஓர் ஊர்’ என்று குறித்துள்ளது. அகம் 386ல் கணையன் என்ற பெயருடைய மல்லன் ஒருவன் குறிப்பிடப் பெறுகிறான். இந்த இரு பாடல்களிலும் சுட்டப்பெறும் கணையன் என்பானுக்கும் கணைக்காலிரும்பொறைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. ‘கணையன் அகப்படக் கழுமலம் தந்த’ என்பது கணைக்காலிரும் பொறையோடு தொடர்புடையது போலக் காணப்படினும், அப் பாடலில் குறித்த செய்திகள் தெளிவின்றியிருக்கின்றன. இது களவழி நாற்பது குறிக்கும் போரைக் குறித்ததாகக்கொள்ள முடியாது.

சோழனுக்கும் சேரனுக்கும் போர் நிகழ்ந்த இடமாகிய ‘போர்’ என்பது பற்றித் தெரியவரும் செய்திகளை நோக்குவோம். இந்த ஊர் சோழநாட்டில் உள்ளது எனச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

இழை அணி யானைச் சோழர் மறவன்
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பைப்
புனல் மலி புதவின் போஒர் கிழவோன்
பழையன் ஓக்கிய வேல் போல்

என்று அகநானூற்றிலும் (326),

கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன

என்று நற்றிணையிலும் (10), பழையனுக்கு உரியதாகப்போர் என்ற ஊர் குறிக்கப் படுகிறது. இப் பழையன் சோழனுக்குக் கீழ்ப்பட்ட ஒரு தலைவன் ஆவன். இவனுக்கு உரியதாகக் கூறப்பெறும் போர் என்னும் ஊர் நீர்வளம் நிறைந்தது என்பதும், சோழ நாட்டில் உள்ளது என்பதும் மேற்குறித்த செய்யுட் பகுதியால் அறியலாம். திருப்போர் என்பதில் திரு என்பதை அடைமொழியாகக் கொள்ளல் வேண்டும். இங்ஙனம் கொள்ளாது திருப்போர் என்பதே ஊர்ப்பெயர் என்றும், அது திருப்பூர் என இக் காலத்து வழங்கும் கொங்கு நாட்டு ஊராக இருக்கலாம் என்றும் கருதுவாரும் உண்டு. போர் என்னும் பழையனது ஊர் நீர் வளம் செறிந்தது என்று அகநானூற்றுப் பாடல் குறிப்பதனால், அது போர் நிகழ்தற்கு ஏற்ற இடமாதல் இல்லை. எனவே, அது சேரனுக்குரித்தான ஓர் ஊராக இருத்தல் கூடும். 368-ஆம் புறப்பாட்டின் பழைய குறிப்பு, ‘சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியோடு போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தனைக் கழாத்தலையார் பாடியது’ என்று உள்ளது. இக் குறிப்பினால் போர் என்னும் களம் சேர சோழ நாடுகளுக்கு இடைப்பட்டதாய், இரு பேரரசர்களும் வழிவழியாகப் போர் செய்வதற்கு மேற்கொண்ட இடமாக அமைந்திருந்தது போலும்!

புறநானூற்றுக் குறிப்பும் களவழி நூல்குறிப்பும் சரித்திர அடிப்படையை ஆதாரமாகக் கொண்டனவல்ல என்று அபிப்பிராயப்படுகிறார் ஓர் ஆராய்ச்சியாளர். குலோத்துங்க சோழன் உலாவின் பழைய உரையில், ‘களவழி கொண்டோன் தஞ்சை விசயாலயன்’ (19-20) என்பது குறிக்கப் பெற்றிருக்கிறது. இது உண்மையாயிருக்கலாமோ என்று ஐயுறுவாரும் உளர். இக் கருத்துகள் மேலும் ஆராய்தற்கு உரியனவாம். பெருங்கதையிலும் சிந்தாமணியிலும் வரும் ஒரு சில கருத்துகள் இந் நூலோடு பெரிதும் ஒத்துள்ளமையும் கவனிக்கத் தக்கது. யாவற்றையும் கூர்ந்து நோக்கின், இது பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றிய நூலாதல் கூடும் என்று ஊகிக்கலாம்.

களவழி நாற்பது பாடியவர் பொய்கையார் என்பவராவர். இவரது பெயர் இயற்பெயரா, காரணப்பெயரா என்பது துணியக்கூடவில்லை. காரணப் பெயராயின், இவரைப் பொய்கை நாட்டில் தோன்றியவர் என்றோ, அல்லது பொய்கை ஊரினர் என்றோ கொள்ளலாம். சேரன்பொருட்டு இவர் களவழி நாற்பது பாடுதலின், இவரும் சேர நாட்டைச் சார்ந்தவராகலாம். சங்கத் தொகை நூல்களில் மூன்று பாடல்களைப் பாடியவரும் (புறம் 48, 49: நற். 18), சேரமான் கோக்கோதை மார்பனைப் புகழ்பவரும் ஆகிய பொய்கையார் இவருக்கு முந்தியவராதல் வேண்டும். அப் பொய்கையார் தொண்டி என்னும் ஊரைச் சார்ந்தவர்.

கோதை மார்பின் கோதையானும் ……
கள் நாறும்மே கானல் அம் தொண்டி,
அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்

என்பது அவர் வாக்கு (புறம்48). அவர் பாடிய நற்றிணைப் பாடலிலும் தொண்டியைப்பற்றிய குறிப்பு உள்ளது.

முதலாழ்வார் மூவருள் ஒருவராகிய பொய்கையாழ்வார் மேற்குறித்த இருவரினும் வேறுபட்டவர். அவர் தொண்டைநாட்டுக் கச்சிப் பதியினர். மால் அடியை அல்லால் மற்று எண்ணத்தான் ஆமோ இமை? (31) என்றும்,

திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் (64)

என்றும்,

மாயவனை அல்லால் இறையேனும் ஏத்தாது என் நா (94)

என்றும், திருமால் பத்தியில் அவர் விஞ்சி நிற்பவர். பதினெண் கீழ்க்கணக்கிலும் வழங்காத வடசொற்கள் பல அவரது அந்தாதியில் உள்ளன. யாப்பருங்கல விருத்தியுரையில் பொய்கையார் வாக்காகச் சில பாடல்கள் மேற்கோளாக எடுத்தாளப்பெற்றுள்ளன. பன்னிரு பாட்டியலில் பொய்கையார் பெயரால் சில சூத்திரங்கள் உள்ளன. இந்த இரு நூல்களிலும் குறிக்கப் பெற்றவர் முன் குறித்த மூவரினும் வேறானவர் என்றே கொள்ள இடமுண்டு. எனவே, பொய்கையார் என்னும் பெயருடையார் பலர் பல்வேறு காலத்தில் வாழ்ந்துள்ளமை புலனாம்.

அவர்களுள் களவழி நாற்பது பாடிய பொய்கையாரை இடைக்காலத்தில், சீவக சிந்தாமணி, பெருங்கதை ஆசிரியர்களின் காலத்தை ஒட்டி வாழ்ந்தவராகக் கொள்ளலாம்.

களவழி நாற்பதில் 41 பாடல்கள் காணப்பெறுகின்றன. நூற் பெயருக்கு ஏற்ப 40 செய்யுட்கள் இருத்தலே முறை. ஒரு பாடல் மிகுந்து காண்பது ஐயத்தை விளைப்பதொன்றாம். இந்த 41 பாடல்களுக்கும் பழைய உரை இருப்பதால், அந்த உரைகாரர் காலத்திற்கு முன்பே 41 பாடல்கள் நூலுள் அமைந்து விட்டமை புலனாம். புறத்திரட்டில் ‘களம் என்ற அதிகாரத்தில் களவழி நாற்பதின் செய்யுட்களுள் பத்தினை அத் தொகைநூல் ஆசிரியர் கோத்துள்ளார். அவர் கொடுத்துள்ள பாடல்களில் ‘படைப்பொலி தார் மன்னர்’ (1427) என்ற பாடல் மட்டும் இப்பொழுதுள்ள களவழி நாற்பது ஏட்டுப் பிரதிகளில் இல்லை. இப் பாடலும் சேர, 42 பாடல்களாகும். இப்புறத்திரட்டுச் செய்யுள் மிகைப் பாடலாக நூல் இறுதியில் அமைக்கப்பெற்றுள்ளது.

இந் நூற் பாடல்களில் நாலடி அளவியல் வெண்பாக்களும் (22) பஃறொடை வெண்பாக்களும் (19) காணப்படுகின்றன. ஐந்து செய்யுட்களைத் தவிர ஏனையவெல்லாம் ‘அட்டகளத்து’ என்று முடிகின்றன. மூன்று செய்யுட்கள் (15, 21,29), ‘பொருத களத்து’ என்றும், ஒரு செய்யுள் (40), ‘கணைமாரிபெய்த களத்து’ என்றும், மற்றொரு செய்யுள் (35), ‘அரசு உவாவீழ்ந்த களத்து’ என்றும் முடிவு பெற்றுள்ளன. யானை, குதிரை, தேர், தானை, என்ற நால்வகைப் படைப்போரும் குறிக்கப்படினும், யானைப் போரைப் பற்றிய செய்யுட்களே மிகுதியாய் உள்ளன. சேரன் யானைப்படை மிகுதியுடையனாதல் பற்றி, அதனை மிகுதியாக வருணித்தார் போலும்! போர்க்களக் காட்சிகளை உவமை வாயிலாக ஆசிரியர் விளக்கும் திறம் மிக அழகாய் அமைந்துள்ளது. பின்னூல்கள் போர்க்களத்தை வருணித்துப் பாடுதலுக்கு இந்நூல் வழிகாட்டியாய் அமைந்தது என்று கூறலாம்.

இந் நூற் செய்யுட்கள் நச்சினார்க்கினியர் முதலிய பழைய உரைகாரர்களால் மேற்கோளாகக் காட்டப்பெறும் சிறப்பினைப் பெற்றுள்ளன. இந் நூல் முழுமைக்கும் பழைய உரை காணப்படுகிறது.

Additional information

Authors Name

1 review for களவழி நாற்பது மூலமும் உரையும்

  1. Ananthalakshmi

    arumai

Add a review

Your email address will not be published. Required fields are marked *