நாலடியார் மூலமும் உரையும் EBOOK DOWNLOAD

"இலவசமாக மின் புத்தகங்கள் பதிவிறக்க: Login/SignUp"

நாலடியார் eBook Download

# இந்த புத்தகத்தை eBook (ePub, MOBI)  வடிவில் மாற்ற உதவி தேவை….

Add your review

நாலடியார்

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். ‘வேளாண் வேதம்’ என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.ஆலும் வேலும் பல்லுக்குறுதி; பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.

வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.

நாலடியார் சிறப்பு 

திருக்குறளுக்கு அடுத்த நிலையில்வைத்துப் போற்றப்பெறும் சிறப்பு வாய்ந்த அறநூல் நாலடியார். நூல் அமைப்பில் இரண்டிற்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. திருக்குறள் சூத்திரம் போன்று இரண்டு அடிகளில் கருதிய பொருளைச் சுருங்கச் சொல்லிவிளங்க வைக்கிறது; நாலடியாரோ, பொருள்களைத் தக்கஉதாரணம் காட்டி விளக்குவதோடு, கற்போர் உளம் கொளும்வகையில் தெளிவுபடவும் உரைக்கின்றது. இவ்வகையில் நாலடியாரைத் திருக்குறளின் விளக்கம் என்று கூறலாம்.’நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’ என வழங்கும் பழமொழியிலும், ‘பழகு தமிழ்ச்சொல் அருமை நால்இரண்டில்’ என உரைக்கும் தனிப்பாடல் பகுதியிலும் இந்த இரு அற நூல்களையும் ஒருசேர வைத்து எண்ணுதல் நோக்கத் தக்கது.

நான்கு அடி வெண்பாக்களால் இந்நூல் செய்யுட்கள் அமைந்திருத்தலின் இதனை ‘நாலடி’என்றும், ‘ஆர்’என்னும் சிறப்பு விகுதியை இறுதியில் இணைத்து, ‘நாலடியார்’ என்றும் வழங்கி வருகின்றனர்.குறளைத் ‘திருக்குறள்’ என்று குறித்ததைப் போல,நாலடி வெண்பாக்களாலாகிய வேறு நூல்கள் பல தமிழில் இருக்கவும், இந் நூல் ஒன்றையே ‘நாலடி’ என்ற பெயரால்குறித்து வந்துள்ளனர். இந் நூலில் அமைந்துள்ள பாடல்தொகையை உட்கொண்டு, ‘நாலடி நானூறு’ என்றும் இதுகுறிக்கப் பெறுகின்றது. இதற்கு ‘வேளாண் வேதம்’ என்றஒரு பெயரும் உளதென்பது சில தனிப் பாடல்களால் தெரியவருகிறது.

இந் நூல், ஆசிரியர் ஒருவரால் இயற்றப்பெற்றது அன்று என்றும், பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாய் உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர். இது பற்றிய கன்னபரம்பரைவரலாறு ஒன்றும் உள்ளது: ஒரு சமயம் எண்ணாயிரவர்சமண முனிவர், பஞ்சத்தால் தம் நாடு விட்டு வந்து, பாண்டியன் ஆதரவில் வாழ்ந்து வந்தனராம். சில காலத்தில்தம் நாடு முன் போலச் செழிப்புறவே அவர்கள் மீண்டுசெல்ல விரும்பிய போது, பாண்டியன் அவர்களைப்பிரிய மனம் இன்றி, விடைகொடாது இருந்தனனாம். இதனால், எண்ணாயிரவரும் ஒவ்வொரு பாடல் எழுதித்தத்தம் இருக்கையின் கீழ் வைத்துவிட்டு, பாண்டியனிடம் அறிவியாமலே, தம் நாட்டுக்குத் திரும்பிவிட்டனராம். இச் செய்தி தெரிந்த மன்னன், புலவர்களைப் பிரிந்த மனத்துயராலும், தன் வாக்கை அவர்கள் மதியாமைபற்றி எழுந்த வெகுளியாலும், அவர்கள் எழுதிய எண்ணாயிரம் பாடல்களையும் வைகைப் பெருக்கில் எறியக் கட்டளைபிறப்பித்தானாம். அரசன் ஆணைப்படி வைகையில் எறிந்தஏடுகளில் நானூறு நீரை எதிர்த்து வரவே, பாண்டிய மன்னன் அவற்றைச் சிறந்தன என்று கொண்டு தொகுப்பித்துவைத்தானாம். இந் நிகழ்ச்சியைச் சில தனிப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

எண் பெரும் குன்றத்து எணாஅயிரம்இருடி
பண் பொருந்தப் பாடிய பா நானூறும்

என்றும் ஒரு தனிப்பாடலில் காண்கிறது.

இவ் வரலாறு எவ்வாறாயினும், நாலடியார்புலவர் பலர் பாடிய செய்யுட்களின் தொகுதி என்றே ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர். கூறியது கூறலாகச்சில கருத்துகள் அங்கங்கே காணப்பெறுதலும் இதற்குத்தக்க சான்றுகளாம் என்பர்.

‘வெள்ளாண் மரபுக்கு வேதம்’ எனச்சான்றோர்
எல்லாரும் கூடி எடுத்துரைத்த, சொல்ஆரும்,
நாலடி நானூறும் நன்கு இனிதா என்மனத்தே
சீலமுடன் நிற்க, தெளிந்து.

என்ற தனிப்பாடல் இந்நூலிலுள்ள பாக்கள் சான்றோர் பலர் பாடியவை என்னும் கருத்தைப் புலப்படுத்துகிறது. சீவக சிந்தாமணி உரையில் (1089).நச்சினார்க்கினியர், நாலடியார் பாடல் ஒன்றை மேற்கோள்காட்டி, ‘பிறரும் இச்சமயத்தார்,

சிறுகா பெறுகாமுறை பிறழ்ந்து வாரா” (நாலடி 110) என்பதனானும் உணர்க’ என்று குறித்துள்ளனர். இவற்றால் நாலடியார்சைன சமயச் சான்றோர் பலர் பாடிய பாடல்களின் தொகுதிஎன்பது போதரும்.

நாலடியார்ப் பிரதிகள் சிலவற்றில் காணும் ‘வளம் கெழு திருவொடு‘ எனத் தொடங்கும் பாடலிலிருந்து, நாலடிநூலுக்கு அதிகாரம் வகுத்தவர் ‘பதுமனார்‘ என்பதும், இவ்வதிகாரங்களை முப்பாலுக்கும் அடைவுபடுத்தி உரை கண்டவர் ‘தருமர்‘ என்பதும் தெரியவருகின்றன.

பதுமனார், திருக்குறள் நூலைப் போன்று அதிகாரத்திற்குப் பப்பத்துப்பாடல்களாக அமைத்து, நூலை உருவாக்கியிருக்கிறார். நூலுக்குப் புறம்பாக முதற்கண் உள்ளகடவுள் வாழ்த்துப் பாடல் நீங்கலாக, இதன்கண் 40 அதிகாரங்களும் 400 பாடல்களும்உள்ளன. பின்னர், பாலும் இயலும் வகுத்த உரையாசிரியர்கள்,

  • அறத்துப்பால்,
  • பொருட் பால்,
  • காமத்துப் பால்

என முப்பாலாகப்பகுத்து, இயல் பாகுபாடுகளும் செய்திருக்கின்றனர். பொருட்பாலில் பொது இயல், பல் நெறி இயல் என்பனஓர் அதிகாரமே ஓர் இயலாகக் குறிக்கப்படுபவை. தருமர்இறுதி மூன்று அதிகாரங்களையும் காமத்துப்பால் எனக் கொண்டு, ‘பொதுமகளிர்’ என்னும் ஓர் அதிகாரத்தை (38) ‘இன்ப துன்பஇயல்’ என்றும், ஏனை இரண்டு அதிகாரங்களையும்(39, 40) ‘இன்ப இயல்’ என்றும் கொள்வர்.வேறு சில உரைகாரர் இறுதி அதிகாரமாகிய ‘காமம் நுதல் இயல்’ ஒன்றை மட்டுமேகாமத்துப் பாலுக்கு உரியதாகக் கொண்டுள்ளனர். ஓர் அதிகாரமே இயல்களாக அமைந்துள்ளமையும், ஓர் அதிகாரம் இயலாகவும் ‘பால்’ எனப்படும் பெரும் பிரிவாகவும் அமைந்துள்ளமையும் சிந்திக்கின், இந்தப் பால், இயல் பகுப்பு சிறந்த அமைப்பு முறையாகத் தோன்றவில்லை. காமத்துப் பாலின் இன்ப இயல் பாடல்களுக்குத் துறைக்குறிப்புகளும் உரைகளில் காணப்படுகின்றன.

இந்நூல் பாடல்களில் ஆடூஉ முன்னிலை(52) அதிகமாகவும், மகடூஉ முன்னிலை (6) மிகக் குறைவாகவும் வந்துள்ளன. ‘பூங்குன்றநாட!’ என வரும் விளித்தொடர் நூலகத்து இரண்டு இடங்களில் (128, 212)வருவது கொண்டு, பூங்குன்ற நாட்டுத் தலைவனைக் குறித்ததாக எண்ணுவோரும் உண்டு. ஆனால், இவையும் ஏனைய ஆடூஉ முன்னிலைத் தொடர்களைப் போலப்பொது வகையில் அமைந்தவை என்பதே பொருத்தம் எனத் தோன்றுகிறது.

ஆனால், ‘முத்தரையர்’ என்ற அரசபரம்பரையினரைக் குறித்த செய்திகள் இரண்டு பாடல்களில் (200, 296)உள்ளன. இம் முத்தரையர் வரலாற்றொடு இயைபுபட்டவர் என்றும், இவர்கள்காலம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தியதாதல் வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். எனவே, நாலடி நானூறும் இக்காலத்தைச் சார்ந்ததாதல் கூடும்.

இந் நூலைத் தொகுத்து முறைப்படுத்தியபதுமனாரே இதற்கு ஓர் உரையும் வகுத்தார் என்பது தெரியவருகிறது. மதிவரர் என்பவர் இந் நூற்கு அரும் பதவுரை இயற்றினார் என்பதும், தருமர் என்பவர் உரை எழுதினார் என்பதும் தனிப்பாடல்களால் தெரியவருகின்றன.

இந்நூலினை இளம்பூரணர் முதலிய தொல்காப்பிய உரைகாரரும் பரிமேலழகரும் அடியார்க்கு நல்லாரும் தம்தம்உரைகளில் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.

User Reviews

0.0 out of 5
0
0
0
0
0
Write a review

There are no reviews yet.

Be the first to review “நாலடியார் மூலமும் உரையும் EBOOK DOWNLOAD”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

நாலடியார் மூலமும் உரையும் EBOOK DOWNLOAD
நாலடியார் மூலமும் உரையும் EBOOK DOWNLOAD
Tamill eBooks Org
Logo
Register New Account
Reset Password
Shopping cart